Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

08 February 2021

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு



ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்தியாவின் 51வது மற்றும் தமிழகத்தின் 5வது புலிகள் சரணாலயமாக மேகமலை அறிவிக்கப்பட்டுள்ளது

மேகமலை புலிகள் சரணாலயத்தால் ஒருகோடி மக்களின் பிரச்னைக்கு தீர்வு

தேனி :தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் ஸ்ரீவில்லிபுத்துார் -- மேகமலை -புலிகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டு அதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் ஒரு கோடி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் வைகை ஆறும் ஜீவநதியாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேகமலையில் 8 புலிகள் மட்டுமே வசித்தன. 2018 கணக்கெடுப்பில் 11 பெண் , 3 ஆண் என, 14 புலிகள் இருந்தன. இதனால் மேகமலையை புலிகள் சரணாலயமாக மாற்ற வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அது சாத்தியமாகியுள்ளது.

மேகமலை வன உயிரினக் கோட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தை இணைத்து 1017 சதுர கி.மீட்டர் வனப்பகுதி ஸ்ரீவில்லிபுத்துார்- - மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தொழில்நுட்பக் குழுவினர் தமிழக அரசுடன் இணைந்து ஜன., 7 ல் வரைவு அறிக்கையுடன் திட்ட வரைவை, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பினர். ஆய்வுக்கு பின் ஜன.22ல் ஸ்ரீவில்லிபுத்துார் -- மேகமலை புலிகள் சரணாலயத்திற்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்.டி.சி.ஏ.,) ஒப்புதல் அளித்தது. மாநில அரசின் அங்கீகாரத்திற்காக ஆவணங்களை தமிழக அரசின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலருக்கு அனுப்பியது.

பா.ஜ., அரசின் முதல் புலிகள் சரணாலயம்:

இந்தியாவில் ஏற்கனவே 50 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. இந்த சரணாலயம் அறிவிப்பால் பிரதமர் மோடி அரசு அனுமதி வழங்கிய முதல் புலிகள் சரணாலயம் என்ற பெயர் இதற்கு கிடைத்துள்ளது. 51வது புலிகள் சரணாலயமாக திகழும். இதன் மூலம் தேனி, மதுரை விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகி, பாசன நிலங்கள் பயன் பெறும்.

மாநிலத்தின் 5வது சரணலாயம்.

தமிழகத்தில் ஏற்கனவே களக்காடு- முண்டந்துறை, முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயங்கள் உள்ளன. ஐந்தாவதாக இது உருவாகியுள்ளது.

இதில் 64 ஆயிரத்து 186.21 எக்டேர் காப்புக்காடுகள் அடங்கிய பகுதி, புலிகள் வாழ்விடமாக கருதப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாகவும், மீதியுள்ள வனப்பகுதி காப்பகத்தின் வளர்ச்சிப்பணிகளுக்கான பகுதியாகவும் பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், மதுரை மாவட்டத்தில் பேரையூர், உசிலம்பட்டி, தேனியில் உத்தமபாளையம், ஆண்டிபட்டி தாலுகாக்களையும் வனத்துறையின் மேகமலை, ஸ்ரீவில்லிபுத்துார் வனச் சரகத்திற்கும் கட்டுப்பட்ட பகுதியில் இந்த சரணாலயம் அமைகிறது.

இதற்கு மதுரை, திருநெல்வேலி வனப்பகுதிகள், கேரள மாநிலம் பெரியாறு புலிகள் காப்பகத்தின் பகுதிகள் எல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

ஜீவநதியாகும் வைகை

உணவு சங்கிலித் தொடரில் முதன்மையான விலங்கு புலிகள் ஆகும். புலிகள் காப்பகம் அமைந்தால் பல்லுயிர் பெருக்கம் உருவாகி இயற்கை சமநிலை பெற்றும், மழை, சீதோஷ்ண நிலை சமநிலையில் இருக்கும். முதுமலை புலிகள் சரணாலயம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தால் மோயாறு வற்றாமல் ஓடுகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்தால் அமராவதி நதி வற்றாமல் ஓடுகிறது. தாமிரபரணி 1972ல் முழுவதும் நீரின்றி வறண்டது. அதன் பின், 1988 ல் தமிழகத்தின் முதல் புலிகள் சரணாலயமாக களக்காடு- முண்டந்துறை அமைக்கப்பட்டது. அதிலிருந்து ஐந்தாவது ஆண்டிலேயே தாமிரபரணி வற்றாத ஜீவ நதியாக உருவெடுத்தது. மழை அளவு அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தன.
தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள ஒரு கோடி மக்களின் குடிநீர் தேவையையும், பாசனத் தேவையையும் பூர்த்தி செய்யும் வைகை ஆற்றின் பிறப்பிடம் மேகமலை. கிழக்குப் பகுதியில் அர்ஜூனா நதி (விருதுநகர்) ஓடுகிறது. இங்கு சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி போல் வைகையும் ஜீவநதியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES