
துலாம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
சமயோஜித புத்தியும் சாமர்த்திய குணமும் கொண்ட துலாம் ராசி அன்பர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு 6 -ம் வீடான மீனத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து உங்களை வாட்டி எடுத்த குருபகவான் இப்போது 7-ம் இடமான மேஷ ராசியில் வந்து அமர்கிறார். 22.4.2023 முதல் 1.5.2024 வரை ஏழாம் வீட்டில் நின்று பலன் கொடுக்க இருக்கிறார். ஏழில் குரு சஞ்சாரம் செய்தால் மனதில் தெளிவு பிறக்கும். அடங்கிக்கிடந்த ஆற்றல்கள் வெளிப்படும். ஏழாம் வீட்டில் அமர்ந்து நேர் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கிறார். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி பிறக்கும். தேவைக்கும் அதிகமாகப் பணவரவு இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமை புகழ் அதிகரிக்கும். மகனுக்கு வேலை மகளுக்கு திருமண ஏற்பாடு ஆகியன நல்லபடி அமையும்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டையும் 11 ம் வீட்டையும் பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இளைய சகோதர, சகோதரிகள் தங்கள் தவற்றை உணர்ந்து சமாதானம் ஆவார்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வி.ஐ.பிகள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். கெட்ட பழங்களிலிருந்தும் கெட்ட சகவாசங்களில் இருந்தும் முற்றிலும் விடுபடுவீர்கள். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை
குருபகவான் இந்தக் காலகட்டத்தில் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் வேலைகள் இழுபறியின்றி முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். போட்டி பந்தயங்களில் வெற்றிகள் குவியும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும் என்பதால் சிக்கனம் தேவை. யாருக்கும் ஜாமின் கையெழுத்துப் போடவேண்டாம்.
23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை
இந்தக் காலகட்டத்தில் குருபகவான் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் முயற்சிகளில் வெற்றி, எதிர்பாராத பணவரவு ஆகியன கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு சுபநிகழ்ச்சிகள் கூடிவரும்.
17.4.2024 முதல் 1.5.2024 வரை
குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் சஞ்சரிக்கும் இந்தக் காலக்கட்டங்களில் யாருக்கும் இரவல் தருவதை நிறுத்துங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தப்பாருங்கள்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.2023 முதல் 20.12.2023 வரை
குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் தெளிவாக சிந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். என்றாலும் சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.
வியாபாரிகள் : போட்டிகளால் முடங்கிப்போன வியாபாரத்தை மறுபடி தூக்கி நிறுத்துவீர்கள். உங்களின் தொழிலில் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முயற்சிகள் பலன் கொடுக்கும். அனுபவமிகுந்த நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். கடையை அழகுபடுத்துவீர்கள். புது சலுகைகளை அறிமுகப்படுத்தி விற்பனையைப் பெருக்குவீர்கள். செப்டம்பர், அக்டோபர், ஜனவரி, மார்ச் மாதங்களில் வங்கிக் கடனுதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் : அலுவலக சூழலில் இருந்த பிரச்னைகள் தீரும். சக ஊழியர்கள் உஙளை மதிப்பார்கள். செப்டம்பர், ஜனவரி, மார்ச் மாதத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டிலிருந்து நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களை வெற்றி பெற வைப்பதுடன், வருங்காலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.
sourcs
www.vikatan.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE