கும்பம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

கொள்கை, கோட்பாடுகளுடன் வாழ்ந்து பிறரையும் வாழவைக்கும் கும்பராசி அன்பர்கள்... உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான மீனத்தில் அதாவது தன குடும்ப வாக்குஸ்தானத்தில் அமர்ந்து ஓரளவு நல்லபலன்களைத் தந்துகொண்டிருந்த குருபகவான் இப்போது 3 ம் வீட்டில் அடியெடுத்துவைக்கிறார். 22.4.2023 முதல் 1.5.2024 வரை மூன்றாவது வீட்டிலேயே சஞ்சாரம் செய்யும் குருபகவான் எப்படிப்பட்ட பலன்களைத் தருவார் என்று பார்ப்போம்.
நிதானமாகச் செயல்பட வேண்டிய காலம் இது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவது வேண்டாம். முயற்சிகள் நேரத்தில் கைகூடாமல் உங்கள் பொறுமையைச் சோதிக்கும். வீண் அலைச்சல், டென்ஷன் வந்து விலகும். குறிப்பாக விவாதங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சகோதர உறவுகளிடையே இணக்கத்தைப் பராமரிப்பது நல்லது.
என்றாலும் குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான சிம்மத்தையும் ஒன்பதாம் வீடான துலாமையும் 11 வீடான தனுசையும் பார்ப்பது மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும். குருவின் பார்வையால் குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் நீங்கும். அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். கடன் தொல்லைகளில் இருந்து படிப்படியாக மீள்வீர்கள்.
கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பிதுர்வழி சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தீரும். பிள்ளைகள் உங்களின் சொல்கேட்டு நடப்பார்கள். மகன், மகளின் கல்வி திருமணம் ஆகிய விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். என்றாலும் தேவையற்ற பயம் மனதில் வந்து தொந்தரவு தரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தடைப்பட்டிருந்த காரியங்கள் முடிவுக்கு வரும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை
குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டங்களில் பணவரவு அதிகரிக்கும். என்றாலும் செலவுகளும் துரத்தும். சிக்கனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்.
23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை
உங்கள் ராசிக்கு சுகாதிபதியும், பாக்கியாதிபதியுமான சுக்கிரன் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் அரைகுறையாக இருந்த வேலைகள் முடியும். மனதிற்கு இனிய திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களுடன் இருந்த வருத்தங்கள் நீங்கும்.
17.4.2024 முதல் 1.5.2024 வரை
குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற செலவுகள் உண்டாகும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.2023 முதல் 20.12.2023 வரை
வக்ர கதியில் குருபகவான் அசுவினி, பரணி ஆகிய நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வதால் வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. செல்வம், செல்வாக்குக் கூடும்.
வியாபாரிகள் : தொழிலில் மிகவும் கவனமும் அக்கறையும் அவசியம். முக்கிய விஷயங்களைப் பணியாளர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே முடிக்கப் பாருங்கள். முதலீடுகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்யுங்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. முரண்டு பிடிக்கும் பழைய பணியாளர்களை மாற்றுவீர்கள். லாபம் ஓரளவுக்கு இருக்கும். ஹோட்டல், லாட்ஜ், வாகன உதிரி பாகங்கள், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள். ஜூன், நவம்பர் மாதங்கள் சாதகமாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் : அலுவலகச் சூழலில் தேவையற்ற வாக்குவாதங்கள் வந்துபோகும் என்பதால் அமைதி காப்பது நல்லது. சின்னச் சின்ன அவமானங்கள் நேர்ந்தாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். மேலதிகாரிகள் உங்களின் மதிப்பைப் புரிந்துகொள்வார்கள். முக்கியப் பொறுப்புகள் தேடிவரும். சிலருக்கு எதிர்பாராத இடத்துக்கு மாற்றப்படுவீர்கள். என்றாலும் எதிர்காலத்தில் அதனால் நன்மையே ஏற்படும். சம்பள உயர்வும் சலுகையும் மே, டிசம்பர் மாதங்களில் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி கொஞ்சம் உங்களுக்கு அசௌகர்யங்களைக் கொடுத்தாலும் வாழ்வில் மேன்மேலும் மெருகேறவைக்கும். வெற்றிகள் கிடைக்கும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE