Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 December 2020

மீனம் தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்

மீனம் : அமோக லாபம்


14.4.2021 முதல் 13.4.2022 வரை

மீனம்

சிந்தித்து செயல்பட்டால் சந்தோஷம் வரும்

(பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

மீன ராசி நேயர்களே
!

பிறக்கும் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் குரு, விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அதே நேரத்தில் லாபாதிபதி சனி, லாப ஸ்தானத்தில் பலம் பெற்றிருக்கிறார். எனவே வருமானம் திருப்திகரமாக இருந்தாலும், விரயங்களும் கூடுதலாகவே இருக்கும். சில நேரங்களில் வீண் விரயங்கள் கூட ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு, இடமாற்றங்கள் தானாக வந்து சேரலாம். கொடுக்கல்- வாங்கல்களில் கவனத்துடன் இருக்க வேண்டிய ஆண்டு இது.

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குருபகவான், விரய ஸ்தானத்தில் இருக்கிறார். தொழில் ஸ்தானத்திற்கும் குரு அதிபதி என்பதால், தொழிலில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். இயல்பான வாழ்க்கையில் சில இடையூறுகள் ஏற்பட்டு மன சங்கடத்தை உண்டாக்கும். கூட்டுத் தொழில் நடத்துபவர்களுக்கு கூட்டாளிகளால் பிரச்சினைகள் ஏற்படும். அவர்கள் உடனடியாக விலகுவதாகச் சொல்லி அச்சுறுத்துவர். சனி பகவான் சொந்த வீட்டில் சஞ்சரித்தாலும், அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தேக ஆரோக்கியத்தில் தொல்லைகள் வரலாம். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் திருப்தியாக கிடைக்காது.

தன ஸ்தானத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கை உள்ளது. சூரியன், சந்திரன், புதன், சுக்ரன் ஆகியவை ஒன்று கூடி கூட்டுக்கிரக யோகத்தை ஏற்படுத்தினாலும், தனாதிபதி செவ்வாய், ராகுவோடு சேர்ந்திருப்பதால் விரயங்களையே அதிகம் சந்திப்பீர்கள். புத- ஆதித்ய யோகம், புத- சுக்ர யோகம், செவ்வாய், சுக்ரன் பரிவர்த்தனை யோகம் போன்ற யோகங்கள் செயல்படுகின்றன. இதன் விளைவாக கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அடகு வைத்த நகைகளை மீட்டு வந்து, அணிந்து அழகு பார்க்கும் யோகம் உண்டு.

அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி அழகு பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் ஆகியவற்றையும் வாங்கி மகிழக்கூடிய நேரம் இது. பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். ‘பட்டப்படிப்பு முதல் மேல்படிப்பு வரை, படிக்க விரும்பும் பிள்ளைகளைப் படிக்க வைப்பதா? அல்லது வேலைக்கு சோ்த்து விடுவதா? அல்லது வேலையில் இருந்து கொண்டே படிப்பை தொடரச் சொல்வதா?’ என்றெல்லாம் உங்கள் மனதில் எண்ணம் கரைபுரண்டு ஓடும்.

செவ்வாய், சுக்ரன் பரிவர்த்தனை யோகம் பெற்றிருப்பதால், முன்பு வாங்கிப் போட்ட இடங்களெல்லாம் பலமடங்கு விலைக்கு விற்பனை ஆகலாம். உடன்பிறப்புகளின் இல்லத்தில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பாகப்பிரிவினைகளில் உங்களுக்குரிய பங்கு கிடைக்க பெரும் பிரயாசை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

குருவின் வக்ர இயக்கம்

ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குரு பகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்.

உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் குரு பகவான், வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். உடல்நலக் குறைபாடு அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படலாம். சங்கிலித் தொடர்போல கடன்சுமை கூடிக்கொண்டே செல்லும்.

குருப்பெயா்ச்சி காலம்

ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குரு பகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 13.4.2022-ல் மீன ராசிக்குப் பெயா்ச்சியாகிறார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகின்றது. சுக ஸ்தானம், எதிரிகள் ஸ்தானம் மற்றும் இழப்புகள் ஸ்தானம் ஆகிய மூன்றின் மீதும் குரு பார்வை பதிவதால் அந்த இடங்கள் புனிதமடைந்து நற்பலன்களை வழங்கும்.

குறிப்பாக சுக ஸ்தானம் புனிதமடைவதால் ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். ஆச்சரியப்படத்தக்க அளவில் உடல்நலனில் முன்னேற்றமும், உற்சாகத்துடன் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டு. நோயின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது என்று சொன்ன மருத்துவர்கள், இப்பொழுது படிப்படியாக நோயின் தாக்கம் குறைந்து உடல்நலம் சீராகிக் கொண்டு வருகிறது என்று ஆச்சரியப்படுவா்.

குருவின் பார்வை 6-ம் இடத்தில பதிவதால் பகையை வெல்லக்கூடிய ஆற்றல் உங்களுக்கு வந்துசேரும். எதிரிகள் உதிரிகளாவர். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது தானாகவே கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். மேலதிகாரிகள் நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்க காத்திருப்பர். தொழில் செய்பவர்களுக்கு இருந்த குறுக்கீடுகள் அகலும்.

ராகு-கேது பெயர்ச்சி காலம்

21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 2-ம் இடத்திற்கு ராகுவும், 8-ம் இடத்திற்கு கேதுவும் வரப் போகிறார்கள். ‘இரண்டில் ராகு இருந்தால் திரண்ட செல்வம் வரும்’ என்பார்கள். எனவே எதிர்பாராத தன லாபம் வரலாம். இதுவரை பற்றாக்குறை பட்ஜெட்டில் உழன்று வந்த நீங்கள் இனி மித மிஞ்சிய பொருளாதாரத்தில் மிதக்கப் போகிறீர்கள். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் யோகம் வந்து சேரும். கடுமையாக முயற்சித்தும் நடைபெறாத காரியங்கள் இப்பொழுது நடைபெறும். புதிய வாய்ப்புகள் பலவும் வாசல் கதவைத் தட்டும். புனிதப் பயணங்கள் வந்து சேரும்.

அஷ்டமத்தில் கேது அடியெடுத்து வைப்பதால் இழப்புகள் பலவற்றையும் சந்திக்க நேரிடலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. தொழில் சம்பந்தமாக குறுக்கீடுகள் வந்து சேரும். கொடுத்த கடன்கள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் வந்தும், அதை ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகலாம். கேட்ட சலுகைகள் மறுக்கப்படும். உங்களுக்கு வரவேண்டிய பெரிய வாய்ப்பு, உடன் பணிபுரிபவர்களுக்கு சென்றால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுபோன்ற காலங்களில் ராகு-கேதுக்களுக்குரிய சிறப்பு பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அதாவது லாப ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியாக இருப்பவர். விரயாதிபதியாக விளங்குபவர் வக்ரம் பெறுவது நன்மைதான். ஆனால் லாபாதிபதியாகவும் அவர் விளங்குவதால் சனி வக்ரம் பெறும் பொழுது பணத்தட்டுப்பாடும் அதிகரிக்கும். உறவினர் பகை உருவாகும். அரசு வழிப் பிரச்சினைகள் ஏற்படும். வீடுமாற்றச் சிந்தனைகளும், ஊர்மாற்றச் சிந்தனைகளும் உருவாகும். பொதுவாக இதுபோன்ற வக்ர காலங்களில், சனிக்கிழமை விரதமிருந்து சனிபகவானை வழிபடுவது நல்லது.

14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய்- சனி பார்வை உள்ளது. இந்த காலகட்டத்தில் பொதுநலத்தில் இருப்பவர்கள் மீது வீண்பழிகள் சுமத்தப்பட வாய்ப்பு உள்ளது. பிறருக்கு நன்மை செய்தாலும் அது அவர்களுக்குத் தீமையாகவே தெரியும். கடுமையாக உழைத்தாலும் வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும். சொத்துக்களாலும் பிரச்சினை உருவாகலாம். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டில் உங்களுக்கு பொருளாதார விருத்தி ஏற்படும். என்றாலும் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். கணவன் - மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். புதிய ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். சகோதர வழியில் ஒருசிலர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வது சந்தேகம்தான். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வு திருப்தி தரும். என்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். செவ்வாய் - சனி பார்வை காலத்தில் மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. குரு வழிபாடு வளர்ச்சிக்கு வித்திடும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவதோடு, குன்றக்குடி வள்ளி - தெய்வானை உடனாய ஆறுமுகப் பெருமானை அனுகூலம் தரும் நாளில் வழிபட்டு வந்தால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

கல்வி

இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்று உண்டு. உங்கள் சாதனைகள்மூலம் பெற்றோருக்கு நிம்மதியும் சந்தோஷமும் வரும். வருடக் கடைசியில் மேடை ஏறிப்பரிசுகள் வாங்க வாய்ப்புள்ளது. மேல்படிப்பு மற்றும் ஆராய்ச்‘சிப்படிப்பில் சிறந்து விளங்குவீர்கள்.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES