Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 December 2020

கும்பம் தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்

கும்பம் : நிதானம் தேவை



14.4.2021 முதல் 13.4.2022 வரை

கும்பம்

வரவை விட செலவு அதிகரிக்கும் நேரம்

(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை)

 (பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)

கும்ப ராசி நேயர்களே!

பிறக்கும் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் சனிபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், ஏழரைச் சனி தொடங்கி விட்டது. எனவே விரயங்கள் கூடுதலாக இருக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பச் சுமை கொஞ்சம் அதிகரிக்கும். தடைகளும், தாமதங்களும் வந்து அலைமோதும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் போன்றவை திடீரென வந்து மனக்குழப்பத்தை உருவாக்கலாம். வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் வளர்ச்சியை அதிகரித்துக் கொள்ள இயலும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே குரு பகவான் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. எனவே வருமானம் திருப்தி தரும் என்றாலும், சேமிக்க இயலாத அளவிற்கு சுப விரயங்களும், வீண் விரயங்களும் வந்து கொண்டேயிருக்கும். உடல்நலத்தில் எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட தொல்லைகள் ஏற்பட்டு, மாற்று மருத்துவத்தின் மூலம் உடல்நலத்தை சீராக்கிக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு தொகையைச் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

12-ம் இடமான விரய ஸ்தானத்தில் விரயாதிபதி சனிபகவான் பலம் பெற்றிருக்கின்றார். உங்கள் சுய ஜாதக அடிப்படையில் ஏழரைச் சனி முதல் சுற்றா? நடுச்சுற்றா? மூன்றாவது சுற்றா? என்பதை அறிந்து கொண்டு செயல்படுவதே உத்தமம். சனி முதல் சுற்றாக இருக்குமேயானால் மனச்சுமை அதிகரிக்கும். மக்கள் செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்வது அரிது. விரயங்கள் கூடுதலாக இருக்கும். பணிபுரியுமிடத்தில் பலவிதமான தொல்லைகளைச் சந்திக்க நேரிடலாம். பணிநீக்கம் செய்யப்படக் கூடிய வாய்ப்புகளும் உருவாகலாம். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. அனுபவமிக்கவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பதன் மூலமே உள்ளத்திலும், இல்லத்திலும் அமைதி காண இயலும். இரண்டாவது சுற்றாக சனி வருமேயானால் ஓரளவு கடுமை குறையும். மூன்றாவது சுற்றிலும் ஓரளவு கடுமை குறையும். மூன்றாவது சுற்று நடைபெறுபவர்கள் ஆரோக்கியப் பாதிப்புகளை அதிகம் சந்திக்க நேரிடும். எதிர்பாராத விரயங்களும், உறவினர் பகையும் ஏற்படும்.

மூன்றாமிடத்தில் கூட்டுக்கிரக யோகமாக நான்கு கிரகங்களின் சேர்க்கையுள்ளது. புத -ஆதித்ய யோகம், புத -சுக்ர யோகம், செவ்வாய், சுக்ரன் பரிவா்த்தனை யோகம் போன்றவை செயல்படுகின்றன. ஆனால் சுக ஸ்தானத்தில் ராகுவும், செயல் ஸ்தானத்தில் கேதுவும் இருப்பதால் எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை உண்டு. சில காரியங்களில் போராடி வெற்றிபெற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.

குருவின் வக்ர இயக்கம்

ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குரு பகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன லாபாதிபதி குரு, வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பணப்புழக்கத்தில் தடை ஏற்படும். கொடுக்கல்- வாங்கல்களில் சிக்கல்கள் ஏற்படும். ‘வாங்கியதைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்ததை வாங்க முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வந்தும், பணிபுரிய செல்ல இயலாத சூழ்நிலை உருவாகும்.

குருப்பெயா்ச்சி காலம்

ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 13.4.2022-ல் மீண்டும் மீன ராசிக்கு பெயா்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 5, 7, 9 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது.

பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானம் புனிதமடைவதால், இக்காலத்தில் கொஞ்சம் நற்பலன்கள் நடைபெறும். இனம்புரியாத கவலையில் சிக்கியிருந்த உங்களுக்கு, இப்பொழுது ஏதேனும் ஒரு சில வழிகளில் நன்மைகளும் கிடைக்கும். ஜென்ம குருவாக இருப்பதால் இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை நிகழலாம். இருப்பினும் ஏழரைச் சனி நடைபெறுவதால், எங்கு மாறினாலும் இதே நிலைதான் ஏற்படும். எனவே வரும் மாற்றங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது.

குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பெற்றோர்களின் மணிவிழாக்கள், பவள விழாக்கள் போன்றவை நடைபெறும் அமைப்பு உண்டு. இதுபோன்ற காலங்களில் குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களைத் தோ்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் சுபச் செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

ராகு-கேது பெயா்ச்சி காலம்

21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3-ம் இடத்திற்கு ராகுவும், ஒன்பதாம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். 3-ல் ராகு சஞ்சரிக்கும் போது முன்னேற்றம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. என்றாலும் பாக்கிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் பல நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். ‘சொத்துக்களை நீங்கள் வைத்துக்கொண்டு அதற்குரிய தொகையை எங்களுக்குத் தாருங்கள்’ என்று உடன்பிறப்புகள் உங்களிடம் கூறலாம்.

9-ம் இடமான பிதுர்ராஜ்ஜிய ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கும் கேதுவால், தந்தை வழி உறவினர்களின் பகை மாறும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் விலக புதிய வழிபிறக்கும். அலுவலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ இதுவரை கடன்கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு, கால தாமதங்கள் அகன்று கைக்குப் பணம் கிடைக்கலாம். தெய்வத் திருப்பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இத்தனை நன்மைகள் கிடைக்குமென்றாலும் ஏழரைச் சனி நடைபெறுவதால் திசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு எதிர்பார்த்தபடி நற்பலன்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். வழிபாட்டின் மூலம் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும்.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். வரவு வரும் முன்னதாகவே செலவுகள் காத்திருக்கும். பயணங்களால் பலன் கிடைப்பது அரிது. ஒரு காரியத்தை ஒரு முறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை உருவாகும். நாணயப் பாதிப்புகள் கூட ஏற்படலாம். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ள மாட்டார்கள். ‘வீடு கட்டியும் வாடகைக்கு விட முடியவில்லையே’ என்று ஒருசிலா் கவலைப்படலாம். இடமாற்றம், உத்தியோக மாற்றம் கிடைக்கும். ஆனால் அந்த மாற்றங்களால் திருப்தி ஏற்படாது.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய் - சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். உங்கள் செயல்பாட்டில், மற்றவர்கள் குறை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. மதிப்பையும், மரியாதையையும் தக்க வைத்துக்கொள்ள இயலுமா? என்பது சந்தேகம்தான். மக்கள் செல்வங்களால் சில பிரச்சினைகள் உருவாகி மனக்கவலையைக் கொடுக்கும். குறிப்பாக விழிப்புணா்ச்சியோடு இருக்க வேண்டிய நேரம் இது.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டு விரயச் சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால், கூடுதல் விரயங்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். கணவன் - மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாமல் இருக்க, அனுசரிப்பும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் வேண்டும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் விரயம் ஏற்படும் என்றாலும், முடிவில் காரியம் கைகூடிவிடும். தாய் மற்றும் உடன்பிறப்புகள் ஓரளவே உதவியாக இருப்பர். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைப்பது அரிது. உடன்பணிபுரிபவரால் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். அனுமன் வழிபாடு அல்லல் தீர்க்கும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானை வழிபடுவதோடு, அனுகூலம் தரும் நாளில் திருநள்ளாறு சென்று காக வாகனத்தானைக் கைகூப்பித் தொழுதால் கனவுகள் அனைத்தும் நனவாகும். காரிய வெற்றியும் கிடைக்கும்.




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES