Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

11 December 2021

தொடக்கக்கல்வித்துறையில் மாநில அளவிலான முன்னுரிமை ஏற்படுத்திட கோரிக்கை

தொடக்கக்கல்வித்துறையில் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

தொடக்கக்கல்வித்துறையில் பிற துறைகளில் பின்பற்றப்படுவது போன்று நியமன நாளின் அடிப்படையில் பதவி உயர்வுக்கு அடிப்படையான முன்னுரிமைப் பட்டியல் நடைமுறை விரைவில் அமல்படுத்தி சமூக நீதியை காத்திட வேண்டும் என தமிழக அரசு மற்றும் கல்வித்துறைக்கு பணிவுடன் வேண்டுகோள் வைக்கின்றோம்.

தொடக்கக் கல்வித்துறையில் ஒவ்வொரு ஒன்றியமும் தனித்தனி அலகாக இயங்குகிறது.

அஃது உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் தொடக்கக் கல்வி இருந்த காலக்கட்டத்தில் பின்பற்றப்பட்ட விதிமுறை.

ஏனெனில் உள்ளாட்சி நிர்வாக நடைமுறையில் ஒவ்வோர் ஒன்றியமும் தனி அலகாக கருதப்படும். அதன்படி அக்காலகட்டத்தில் ஆசிரியர் நியமனம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்ளேயே நடைபெற்றது. இதனால் பிற ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து ஓர் ஆசிரியர் மாறுதலில் வேறு ஊராட்சி ஒன்றியத்திற்கு வந்தால் அவர் அவ்வொன்றியத்தில் இளையோராக கருதப்பட்டார்‌. இந்த நடைமுறை அக்காலகட்டத்தில் நியாயமான‌ ஏற்புடைய நடைமுறையே.

ஆனால் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் உள்ளாட்சி நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில்(கல்வித் துறையின் கீழ்) வந்து பல ஆண்டுகள் ஆகின்றன.

மேலும் ஆசிரியர் நியமனம் என்பது ஊராட்சி ஒன்றியத்திற்குள்ளாகவே நடைபெறுவதும் இல்லை. மாநில அளவிலான முன்னுரிமை அடிப்படையிலும், அதன்பின் ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாயிலாக ஆசிரியர்கள்

மாநிலத்தின் வெவ்வேறு ஒன்றிய பள்ளிகளில் நியமனம் செய்யப் படுகின்றனர்.

பெரும்பாலும் யாருக்கும் சொந்த ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணிநியமனம் கிடைப்பதும் இல்லை.

உள்ளாட்சி நிர்வாக நடைமுறைப்படி

ஒவ்வொரு ஒன்றியமும் தனித்தனி அலகாக இயங்குகிறது.

இந்தநிலையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே உள்ளாட்சி நிர்வாக நடைமுறையில் இருந்து தனியொரு துறையாக உருவெடுத்த பின்னரும் இன்றும் தொடக்கக் கல்வித்துறையின் ஒவ்வோர் ஒன்றியமும் தனியோர் அலகாக தொடரச் செய்யும் அல்ல நிலைக்கு இத்துறை சார்ந்த சங்கங்கள் துணை நிற்கின்றன. தோள் கொடுக்கின்றன.

அந்த நடைமுறையால் ஓர் ஒன்றியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட ஒரு ஆசிரியர்

பணி நியமனம் செய்யப்பட்ட ஒன்றியத்தில் இருந்து வேறு ஒன்றியத்திற்கு மாறுதலில் சென்றால், அவர் பல ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவராக இருந்தாலும் புதிதாக மாறுதலில் செல்லும் நேர்வில் பதவி உயர்வுக்கான தனது முந்தைய பணிக்காலத்தினை இழந்து புதிய ஒன்றியத்தில் இளையோராகவே கருதப்படுகிறார். இதனால் அவரின் பதவி உயர்வு பெருமளவில் பாதிப்படைகிறது. ஒரு சில ஒன்றியங்களில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வேகமாகவும், பெரும்பாலான ஒன்றியங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குக்கூட பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உள்ளது.

தொடக்கக் கல்வித்துறையில் பதிவு உயர்வு என்பதே அரிதான ஒன்றாக மாறிப்போன சூழலில் இந்த நடைமுறையால் பதவி உயர்வு என்பதே கனவாகிவிடுகிறது.

#பதவியுயர்வில் சென்றாலும்...தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்

ஓர் இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக மேலும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வில் சென்றால் ஓய்வு பெறும் வரை அவர் பிற ஒன்றியத்திற்கு மாறுதலில் செல்ல முடியாது. அவ்வாறு பிற ஒன்றியத்திற்கு மாறுதலில் செல்ல வேண்டுமென்றால் அவர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து விலகி மீண்டும் இடைநிலை ஆசிரியராக பணியில் அமர்ந்து தான் பிற ஒன்றியத்திற்கு மாறுதலில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

இந்த பாதிப்புகளுக்கெல்லாம் மூல காரணம் ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை பட்டியல் நடைமுறையே.

தற்போதைய நிலையில் தொடக்கக் கல்வித்துறையும் பள்ளிக்கல்வி துறையோடு சேர்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையாகத்தான் இயங்குகிறது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் தயார் செய்து அதன் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் மாறுதல் போன்றவை நடைபெறுவது போன்று தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு பதவி உயர்வு மற்றும் மாறுதல் போன்றவை நடைபெற வேண்டும். இவ்வாறு மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் தயாரித்தால் ஓர் ஆசிரியர் எந்த ஒன்றியத்தில் பணியாற்றினாலும், மாறுதலில் சென்றாலும் பணி நியமன நாளே பதவி உயர்வுக்குத் தகுதி நாளாகக் கருதப்படும். இதுவே ஆசிரியர்களுக்கான சமநீதி மற்றும் சமவாய்ப்பினை வழங்கும் நடைமுறை ஆகும்.

அரசு இதனை செயல்படுத்துவதும் எளிது.

#செயல்படுத்துவதும் நிர்வகிப்பதும் அரசுக்கு எளிது

EMIS இணையதளம் மூலம் அனைத்து பள்ளி மற்றும் ஆசிரியர்களின் தகவல்கள் என அனைத்தும் விரல் நுனியில் உள்ளன. அதனால் எந்தவிதமான வேலைப்பளுவும் மற்றும் செலவும் அரசுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வி துறை ஆணையர் அவர்கள், தொடக்கக் கல்வித் துறையில் மட்டும் ஒன்றிய அளவில் முன்னுரிமை பட்டியல் தயாரிப்பதால் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வில் இழைக்கப்படும் சமூக அநீதிகளைப் போக்கிட மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கும் நடைமுறை ஏற்படுத்திட வேண்டும் என பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.

அரசு கனிவுடன் அக்கருத்தினை பரிசீலனைக்கு எடுத்து, ஆராய்ந்து மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் தயாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

எதிர்பார்க்கும் நல் மாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரும் என நம்புவோம்.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES