Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

22 August 2021

தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் பள்ளி, கல்லூரிகள் 1-ந்தேதி திறக்கப்படும்





தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப் பட்டது. பள்ளி, கல்லூரிகள் 1-ந்தேதி முதல் திறக்கப்படுவதாகவும், 50 சதவீத ரசிகர்களுடன் நாளை முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் மே 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

நாளை வரை..

ஆனாலும் கொரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. அதைத்தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளையும், கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருந்தது.



ஆலோசனை
தற்போது தமிழகம் முழுவதும் தினசரி தொற்றின் அளவு குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று ஆயிரத்து 652 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் 12-வது முறையாக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும், சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை ஆலோசனை மேற்கொண்டார்.இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் கார்த்திகேயன், பள்ளிக்கல்வி துறை முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்பட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு
இந்த ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில் நடைமுறையில் உள்ள கொரோனா நோய் பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகள் 12-வது முறையாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந்தேதி காலை 6 மணி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

1-ந்தேதி முதல் பள்ளி- கல்லூரிகள் திறப்பு



* வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும். இந்த பள்ளிகளில் மதிய உணவுத்திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். இந்த உயர் வகுப்புகள் செயல் படுவதை கவனித்து அதன் அடிப்படையில் மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15-ந்தேதிக்கு பின்னர் திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.

* அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.


* அனைத்து பட்டய படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.


தியேட்டர்கள் நாளை திறப்பு

* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீத ரசிகர்களுடன் நாளை (திங்கட்கிழமை) முதல் தியேட்டர்களை திறக்க அனுமதிக்கப்படும். தியேட்டர் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதை அதன் உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். அங்குள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி, மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு


* உயிரியியல் மற்றும் தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.


* இதுவரை இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் நாளை முதல் இரவு 10 மணி வரை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

ஆந்திரா, கர்நாடகாவுக்கு பஸ் போக்குவரத்து


* தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த (ஐ.டி.) சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

* அங்கன்வாடி மையங்கள் வருகிற 1-ந்தேதி முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும். அங்கன்வாடி மைய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

* ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு பொது பஸ் போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும்.

* நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். மழலையர் காப்பகங்களின் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

* நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

‘பார்கள்’ செயல்பட அனுமதி


* தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.


* தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் (பார்கள்) (எப்.எல்.2, எப்.எல்.3) செயல்பட அனுமதிக்கப்படும்.


* செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களும், தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும்.


* அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் பின்வரும் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

* கடைகளின் நுழைவு வாயிலில், சானிடைசர் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, தானியங்கி உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை


* கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில்அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

* கடைகளின் நுழைவுவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.


* மேற்படி விதிமுறைகளை பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக, இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வீடுவீடாக கண்காணிக்க குழுக்கள்

* நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

* கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க்கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளையும் இந்த பகுதியில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவும் மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* வரையறுக்கப்பட்ட நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில், பின்வரும் நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

* நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.


* நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த்தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.

ஒத்துழைப்பு தரவேண்டும்

பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பாளர்கள் தொடர்ந்து பொதுமக்களிடையே ஏற்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி பெருந்தொற்று நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

அரசு அளிக்கும் இந்த தளர்வுகளை பொதுமக்கள் முழுப்பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி, எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும், அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்று பரவல் நம் மாநிலத்தில் இல்லாத நிலையை உருவாக்க உதவிட வேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4 மாதங்களுக்கு பிறகு தியேட்டர் திறப்பு


கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்தபோது தியேட்டர்கள் மூடப்பட்டன. நோய் பாதிப்பு சற்று குறைந்ததால் கடந்த ஜனவரி மாதம் முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் செயல்பட்டு வந்தன.

அதன்பின்னர், நோய் தாக்கம் அதிகரித்த காரணத்தால் மீண்டும் தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று வெளியிடப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், தியேட்டர்கள் செயல்பட அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி, கடந்த 4 மாதங்களுக்கு பின், தியேட்டர்கள் மீண்டும் 50 சதவீத பார்வையாளர்களுடன் நாளை முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

source

https://www.dailythanthi.com/



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES