Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

01 May 2021

கொரோனா தடுப்பூசி சந்தேகங்களும், கேள்விகளும் மருத்துவரின் விளக்கம்



கொரோனா தடுப்பூசி

தகுதி உள்ளவர்கள், தயக்கமில்லாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.

மே 1ஆம் தேதியிலிருந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துவிட்டது. வதந்தி பரப்புவதே வேலையாக உள்ளவர்களுக்கு புதிய வதந்திக்கான நூல் கிடைத்துவிட்டது. மாத விலக்காகும் சமயத்தில் தடுப்பூசி போட கூடாது, அப்படி இப்படி என்று வகை வகையாக, விதம் விதமாக பொய், புரட்டு, புரளிகள், பல லட்சக்கணக்கானவர்களுக்கு பைசா செலவில்லாமல் பரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன.

சரியான செய்தியை மக்களுக்கு சரியான சமயத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே சில கேள்விகளுக்கான பதில்கள்


1. மாதவிடாய் சமயத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா??

மருத்துவ ரீதியாக எந்தவிதமான பாதிப்பும் இல்லை. தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ஒரு சிலருக்கு லேசான காய்ச்சல் ,தலைவலி, உடல் வலி ,அசதி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் நமக்கு சௌகரியமான சமயத்தில் தடுப்பூசி எடுத்துக் கொள்வது நல்லது. சிலருக்கு மாதவிடாய் சமயத்தில் அதிகமான வயிற்று வலியும் சோர்வும் ஏற்படும். அத்துடன் தடுப்பூசியும் எடுத்துக் கொள்ளும் பொழுது அவர்களுக்கு சிரமங்கள் கூடுதல் ஆகலாம். அவர்கள் தடுப்பூசியை சிறிது தள்ளி எடுத்துக்கொள்ளலாம்.


2. தடுப்பூசி போட்டுக் கொண்ட மாதத்தில் வரும் மாதவிடாய் தள்ளிப் போகுமா ?அதிகமான ரத்தப்போக்கு ஏற்படுமா??? வலி உண்டாகுமா???

மாதவிடாய்கும் தடுப்பூசிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அதனால் ஊசி போட்டுக்கொண்ட மாதங்களில் உங்களுக்கு கூடுதலான ரத்தப் போக்கோ ,அதிகமான வலியோ தடுப்பூசியால் ஏற்படாது. இது வரை தடுப்பூசி எடுத்துக்கொண்ட லட்சக்கணக்கான பெண்களில் பலருக்கும் எந்தவிதமான பிரச்சனையும் மாதவிடாயில் உண்டாக வில்லை. எனவே தைரியமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்.


3. தடுப்பூசி போட்டுக்கொண்டால் கருத்தரிக்க முடியுமா?

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2மாதங்களுக்குப் பிறகு தாராளமாக கருத்தரிக்கலாம். அவர்களுக்கு கர்ப்பப்பையில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை . உலகில் மூன்று நாடுகளில் கர்ப்பமான பெண்களுக்கு தடுப்பூசி கொடுக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் தடுப்பூசியால் ஏற்படவில்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். முக்கியமாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு போன்ற இணை நோய்கள் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும் , முன்கள பணியாளர்களாக உள்ள கர்ப்பிணி பெண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.


4. தடுப்பூசி எடுத்துக் கொண்ட எத்தனை நாட்கள் கழித்து கருத்தரிக்கலாம்?

இது குறித்த விபரமான தரவுகள் இதுவரை இல்லை.
இந்திய தடுப்பூசிகள் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் போட்டுக்கொண்ட இரண்டு மாதம் கழித்து கருத்தரிக்கலாம்.


5. தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு உருவாகும் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடுகள் உண்டாகுமா?

இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு பிறந்த குழந்தைகளுக்கு எந்தவிதமான குறைபாடும் இல்லை. இந்தியாவில் செலுத்தப்படும் தடுப்பூசிகளை பொறுத்தவரை கர்ப்பிணிகளுக்கு செலுத்துவது குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


6.தடுப்பூசிஎடுத்துக்கொண்டால் பிரசவத்தில் சிக்கல் ஏற்படுமா?

தடுப்பூசிகளுக்கும் பிரசவத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.


7.தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு சுகப்பிரசவம் ஆகுமா?

சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்பது தடுப்பூசியால் நிர்ணயிக்கப்படுவதில்லை. குழந்தையின் தலை அமைப்பு , இதயத்துடிப்பு மற்றும் தாயினுடைய உடல்நிலை இவைதான் சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்பது தீர்மானிக்கப்படுகிறது.


8. தடுப்பூசி எடுத்துக் கொண்டால் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்குமா?

குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும் அதுவும் கர்ப்பமான தாய் ஐந்தாவது ஆறாவது மாதங்களில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்போது பிறக்கும் போதே குழந்தைக்கு எதிர்ப்பணுக்கள் ரத்தத்தில் இருக்கும்.


9. தடுப்பூசி எடுத்துக் கொள்வதினால் கர்ப்பப்பை பாதிக்குமா?

தடுப்பூசிக்கும் கர்ப்பப்பைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கடந்த ஆறு மாதங்களில் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பலருக்கும் எந்தவிதமான பிரச்சனையும் பதிவு செய்யப்படவில்லை.


10. செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

தடுப்பூசி எடுத்துக் கொள்வது நல்லது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு இரண்டு மாதங்கள் கழித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பமாகும் சமயத்தில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் அவர்கள் உடலில் இருக்கும் எதிர்ப்புஅணுக்கள் குழந்தைக்கும் கிடைக்கும். தடுப்பூசியால் சிகிச்சையிலோ அதனுடைய வெற்றி சதவீதத்திலோ எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.


11. கருமுட்டை விந்தணு தானம் தருபவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் எப்போது தரலாம்?

இது குறித்தும் விரிவான விபரங்கள் இல்லை என்றாலும் ஒரு வாரம் கழித்து தரலாம்.


12. குழந்தை வேண்டும் என்று எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் தடுப்பூசியும் ஒன்றுக்கொன்று எதிர்வினை புரியுமா?

இதுவரை உள்ள தரவுகளின்படி இந்த மருந்துகள் தடுப்பூசியுடன் வினை புரிவதில்லை


13. நீர் கட்டிக்கு மாத்திரை எடுத்துக் கொண்டு இருந்தால் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளலாமா?

கட்டாயமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் நீர்க்கட்டி சிகிச்சைக்கும் தடுப்பூசியின் வேலைத்திறனுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.


14. தடுப்பூசி போடுவதால் உடல் குண்டாகுமா?

தடுப்பூசி போடுவதால் உடல் குண்டாக வாய்ப்பு இல்லை அதனால் தடுப்பூசி போட்டு விட்டு ஓய்வு எடுக்கிறேன் என்று மாதக்கணக்கில் ஓய்வெடுத்தால் குண்டாவார்கள்.


15.தடுப்பூசி போடுவதால் தீட்டு நின்றவர்களுக்கு தீட்டு வந்துவிடுமா?

வருவதற்கு வாய்ப்பில்லை.


16. தடுப்பூசி போட்ட பிறகு மாதவிடாயில் பிரச்சனை வருமா?

மாதவிடாய்க்கும் தடுப்பூசிகள் எந்தத் தொடர்பும் கிடையாது ஆனால் தடுப்பூசி போட்ட பிறகு பயத்தால் சிலர் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். மன அழுத்தத்தால் உங்கள் மாதவிடாயில் சில மாற்றங்கள் உண்டாகலாம். தடுப்பூசியால் உண்டாவதற்கான வாய்ப்பு இல்லை.

தகுதி உள்ளவர்கள், தயக்கமில்லாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.










No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES