Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

03 February 2021

வாட்ஸ்அப் யுகம் முடிவுக்கு வருகிறதா? - இது சுவாரஸ்யமான கேள்வி மட்டும் அல்ல, முக்கியமான கேள்வியும் கூட

வாட்ஸ்அப் பிரைவசி கொள்கை தொடர்பாக அண்மையில் உண்டான சர்ச்சையின் பின்னணியில் இந்தக் கேள்வி எழுந்துள்ளது. அதைவிட முக்கியமாக, இந்த சர்ச்சை காரணமாக பலரும் வாட்ஸ்அப் மீது அதிருப்தி கொண்டு வேறு மேசேஜிங் சேவைகளை நாடத் துவங்கியிருப்பதும் இந்தக் கேள்விக்கு வலு சேர்க்கிறது.

வாட்ஸ்அப் இதற்கு முன் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி, விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தாலும், அதன் பயனாளிகள் இந்த அளவு அதிருப்தி அடைந்தது இல்லை. வாட்ஸ்அப் அபிமானிகள் வேறு சேவைகள் பற்றி பேசத் துவங்கியிருப்பது முதல் முறையாக நிகழ்ந்துள்ளது. இதனிடையே, இந்திய அரசும் வாட்ஸ்அப்புக்கு புதிய பிரைவசி கொள்கையை கைவிடுமாறு நிபந்தனை விதித்துள்ளது.

நிச்சயம், இது வாட்ஸ்அப்புக்கு சோதனையான காலம்தான். எனவே, வாட்ஸ் அப்பின் எதிர்காலம் என்னாகும் என கேட்பது இயல்பானதுதான்.

ஆனால், இந்தக் கேள்விக்கான பதில்தான் சிக்கலானது. முதல் விஷயம், இப்போதைக்கு வாட்ஸ்அப்புக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்த சர்ச்சை வாட்ஸ்அப்பின் நம்பகத்தன்மையை பாதித்து, சராசரி பயனாளிகள் அதன் மீது சந்தேகம் கொள்ள வைத்திருக்கிறது என்பது உண்மைதான். அதற்காக, அதன் பெரும்பாலான பயனாளிகள் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறுவார்கள் என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.

வாட்ஸ்அப் எதிர்காலம் பற்றி மேற்கொண்டு ஆய்வு செய்வதற்கு முன், இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த சர்ச்சை, பயனாளிகளுக்கு புதியதே தவிர, வாட்ஸ்அப்புக்கு அல்ல.

வாட்ஸ்அப் தொடர்ந்து பலவிதமான சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த சர்ச்சைகளை மீறிதான் வாட்ஸ்அப் வளர்ந்தும் வந்திருக்கிறது. அதோடு, இது வாட்ஸ்அப் தொடர்பான பிரச்னை அல்ல: உண்மையில் வாட்ஸ்அப்பை வைத்துக்கொண்டு, அதை விலைக்கு வாங்கிய ஃபேஸ்புக் என்ன செய்ய விரும்புகிறது என்பது தொடர்பான பிரச்னை.

வாட்ஸ்அப் பயனாளிகள் பரப்பை வருவாய் நோக்கில் பயன்படுத்திக்கொள்ள ஃபேஸ்புக் முயற்சி செய்கிறது. இதற்காக படிப்படியாக அந்நிறுவனம் காய் நகர்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதிதான் பிரைவசி சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

இதே பிரச்னை தொடர்பாக அமெரிக்காவில் ஃபேஸ்புக்கிற்கு எதிராக போட்டித்தன்மையை மீறிய பிரிவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தனிப் பிரச்சனை. இப்போது வாட்ஸ்அப் விஷயத்திற்கு வருவோம்.

வாட்ஸ்அப் தரவுகளை ஃபேஸ்புக்கிற்கு அளிக்க கட்டாயப்படுத்துகிறது என்பதுதான், இப்போதைய சர்ச்சையின் மையப் புள்ளி. வாட்ஸ்அப் இதை புதிதாக செய்யவில்லை, ஏதோ ஒரு விதத்தில் ஏற்கெனவே செய்து கொண்டிருக்கிறது. இது பலருக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால், வாட்ஸ்அப் 'மெட்டாடேட்டா' என சொல்லப்படும் தகவல்களை, 2016-ஆம் ஆண்டு முதல் ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து வருகிறது. இதிலிருந்து விலகிக்கொள்ள இதற்கு முன் வாய்ப்பளித்திருந்தது. இப்போது, அந்த வாய்ப்பும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். வாட்ஸ்அப் இந்த புதிய பிரைவசி கொள்கையை வெளியிடுவதற்கு காரணமே, ஆப்பிள் நிறுவனம் அளித்த நிர்பந்தம்தான் என்கின்றனர். 'இது என்னடா புது கதையாக இருக்கிறே' என நினைக்கலாம்.

இந்தக் கிளைக்கதையை கொஞ்சம் சுருக்கமாக பார்க்கலாம். ஐபோன் மற்றும் ஆப் ஸ்டோர் உள்ளிட்டவற்றுக்கு சொந்தக்கார நிறுவனமான ஆப்பிள் மீதும் விமர்சனங்கள் உண்டு என்றாலும், பிரைவசி விஷயத்தில் கெத்து காட்டும் நிறுவனம் அது. ஆப்பிள் தயாரிப்புகள் பொதுவாக பாதுகாப்பு மிக்கவை என்பது மட்டும் அல்ல, பயனாளிகள் பிரைவசியிலும் அது கவனமாக இருக்கிறது.

அதிலும் குறிப்பாக, அண்மைக் காலத்தில் ஆப்பிள் பிரைவசியை வலியுறுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது. இதன் ஒரு பகுதியாகதான் ஆப் ஸ்டோரில் பட்டியலிடப்படும் செயலிகள், பயனாளிகளிடம் இருந்து திரட்டும் தகவல்கள் தொடர்பான விஷயங்களை வெளிப்படையாக அறிவித்தாக வேண்டும் என நிர்பந்தித்துள்ளது.

ஆப்பிளின் இந்த நிர்பந்தம் காரணமாகவே, வாட்ஸ் அப் தன் பயனாளிகளிடம் இருந்து திரட்டும் தகவல்களை ஆப் ஸ்டோரில் பகிர்ந்து கொண்டது. இதன் பிறகே, வாட்ஸ்அப் பிரைவசி கொள்கை புதுப்பிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியானது.

இனி முக்கிய கதைக்கு வருவோம். வாட்ஸ்அப் பயன்பாட்டில் நிச்சயம் பிரைவசி வில்லங்கம் இருக்கிறது. இது தொடர்பான வாட்ஸ்அப் தரப்பு விளக்கம், புதிய கொள்கையால், பயனாளிகளுக்கு பாதிப்பு இல்லை, வர்த்தக சேவை பயன்படுத்துபவருக்கே இது பொருந்தும் என்பதுபோல அமைந்திருந்தாலும், இந்த விளக்கத்தில் சொல்லப்படாத சங்கதிகள் பல இருக்கின்றன என்றே பிரைவசி வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சரி, இந்த விஷயங்கள் எல்லாம் வாட்ஸ்அப் வளர்ச்சியை எந்த அளவு பாதிக்கும் வாய்ப்பிருக்கிறது?

இந்தக் கேள்விக்கு யாராலும் உறுதியாக பதில் சொல்ல முடியாது என்பதே விஷயம்.

முதல் விஷயம், மேசேஜிங் பிரிவில் வாட்ஸ்அப் ஜாம்பவான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். போட்டி நிறுவனங்கள் இருந்தாலும் வாட்ஸ்அப் தான் இந்த பிரிவின் ராஜா. அதிலும் குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ்அப் அதிக பயனாளிகள் கொண்டுள்ளது. அது மட்டும் அல்ல, இந்தியர்கள் பலர் வாட்ஸ்அப்புக்கு கலாசார ரீதியாக பழகிவிட்டனர்.

வாட்ஸ்அப்பில் குட்மார்னிம் சொல்லி, வீட்டு விஷேசங்களுக்கு கூட, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போடும் இந்தியர்கள் இந்த சேவையை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறுவார்கள் என்று சொல்ல முடியாது.


அதேநேரத்தில் நிச்சயம் கணிசமானவர்கள் மாற்று சேவைகளுக்கு சென்றுள்ளனர். ஆனால், இது மேசேஜிங் போன்ற வளர்ந்து வரும் பரப்பில் இயல்பாக ஏற்படக்கூடியதே. மேலும், இந்த சர்ச்சைக்கு முன்னதாகவே, பலரும் டெலிகிராம் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அதிக சைசில் கோப்பு பகிர்வு வசதி உள்ளிட்ட அம்சங்களுக்காக பலரும் டெலிகிராம் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

'சிக்னல்' போன்ற இந்தியச் சூழலில் அதிகம் அறியப்படாத சேவைகளுக்கு இப்போது அதிக கவனம் கிடைத்திருப்பதை மறுக்க முடியாது.

மேசேஜிங் சேவை தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்கும் சூழலில் மாற்று சேவைகள் பற்றி பலரும் அறிந்து கொள்வது இயல்பானதே. இதனால் வாட்ஸ்அப்பின் செல்வாக்கு சரிந்துவிடும் என சொல்ல முடியாது.

இந்திய மெசேஜிங் சேவையான 'ஹைக்' திடீரென தனது சேவைக்கு முழுக்கு போட்டிருப்பதை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும். ஹைக்கின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும்.

நிற்க, இந்த சர்ச்சையை வாட்ஸ்அப் நோக்கில் அணுகுவதை விட, அப்பாவி பயனாளிகள் நோக்கில் அணுகுவது சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

வாட்ஸ்அப் செல்வாக்கு சரிகிறதா எனும் கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும், இதுபோன்ற சேவைகளை பயன்படுத்தும்போது பயனாளிகளிடம் எந்த அளவு உரிமை இருக்கிறது எனும் கேள்வியை கேட்பது பொருத்தமாக இருக்கும்.

வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்கள் தகவல்களை சேகரிக்கிறது என தெரிந்த பிறகு, அவற்றிடம் என் தகவல்கள் மீது கை வைக்காதீர்கள் என்று சொல்ல முடியுமா? சேவையில் இணையும்போதே, நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதால் இது சாத்தியமே இல்லை. வேண்டுமானால் சேவையில் இருந்து வெளியேறலாம்.

சேவையில் இருந்து வெளியேறினாலும், ஏற்கெனவே திரட்டப்பட்ட தகவல்களை முழுவதுமாக நீக்கச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. அப்படியே சொல்ல முடிந்தாலும், அதை உறுதி செய்துகொள்ள வழி இருக்கிறதா எனத் தெரியவில்லை.

இப்படி இன்னும் பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக, இணையவாசிகள் இணைய நிறுவனங்கள் செயல்படும் விதத்தை, முக்கியமாக அவை தகவல்களை திரட்டும் விதத்தையும், அது தங்களை எந்த விதங்களில் எல்லாம் பாதிக்கிறது என்பதையும் அறிந்து கொள்வதில் கூடுதல் ஆர்வம் காட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES