Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

05 February 2021

20.02.2021ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 10000 ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான தொடர் முழக்கம் போராட்டம்-வட்டார,நகர,மாநகரக் கிளைகளுக்கான மாதிரி துண்டுப்பிரசுரம்



தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம்

பொதுச் செயலாளரின் கடிதம்,நாள்:05.02. 2021
பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே! வணக்கம்.



தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 20.02.2021 அன்று சென்னையில் நடைபெறும் "மாபெரும் தொடர் முழக்கப் போராட்டம்" தொடர்பான களப்பணிகள் மாநிலம் முழுவதும் பேரெழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன.

06.02.2021 மற்றும் 07.02.2021 ஆகிய இரு தினங்கள் மாநிலம் முழுவதும் நடைபெறும் மாவட்டச் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டங்களில் மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். சிறப்புப் பொதுக்குழுக் கூட்டங்களில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களுடன் வட்டார,நகர, மாநகரக் கிளைகளின் துணைப் பொறுப்பாளர்கள், இயக்கத்தின் முன்னணித் தோழர்கள் உள்ளிட்டோரையும் பங்கேற்கச் செய்வது அவசியமானது; சிறப்புக்குரியது.

மாநில செயற்குழு முடிவின்படி 08.02.2021 முதல் 12.02.2021 முடிய தொடர் முழக்கப் போராட்டம் தொடர்பாக ஆசிரியர் சந்திப்பு இயக்கங்களை வட்டார, நகர,மாநகரக் கிளைகள் அளவில் வெற்றிகரமாக நடத்துவதற்குரிய திட்டமிடுதல் அவசியமானது.கடந்த இரண்டு தினங்களாக நம் பேரியக்கத்தின் மாநில மையப் பொறுப்பாளர்கள் சென்னையில் முகாமிட்டு 20.02.2021 அன்று தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவதற்குரிய அனுமதிக் கடிதம் 03.02.2021 அன்று சென்னை மாநகரக் காவல் ஆணையர் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.அதன் பேரில் தொடர் முழக்கப் போராட்டத்தை சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடத்த மாநகரக் காவல்துறையால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

04.02.2021 அன்று ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாநில மையப் பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர்,பள்ளிக் கல்வி இயக்குநர், இணை இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வித் துறை அலுவலர்களைச் சந்தித்து பேசிய நிகழ்வு நடந்தது.

மேலும்,தொடர் முழக்கப் போராட்டத்தில் ஆதரவு உரை வழங்கிட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து சென்னையில் கட்சிகளின் தலைமை அலுவலகங்களுக்கு நேரில் சென்று கடிதம் அளிக்கும் பணி 04.02. 2021 அன்று முழுவதும் நடைபெற்றது. பெரும்பாலான பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நம் போராட்டத்தில் ஆதரவு உரை வழங்க உள்ளனர்.மேலும் தொழிற்சங்கத் தலைவர்களும், தோழமைச்சங்கங்களின் தலைவர்களும் நம் போராட்டத்தில் ஆதரவு உரை வழங்க உள்ளனர்.


பத்தாயிரம் ஆசிரியர்கள் என்ற இலக்கைத் தாண்டி நம் இயக்க உறுப்பினர்களை போராட்டக்களத்தில் பங்கேற்கச் செய்யும் வலிமையும், வல்லமையும் நம் பேரியக்கத்தின் வட்டார, நகர,மாநகர,மாவட்டக் கிளைப் பொறுப்பாளர்களின் செயல்பாட்டில் தான் இருக்கிறது. எப்போதுமே மாநில அமைப்பின் முடிவுகளை செயல்படுத்துவதில் வில்லிலிருந்து வெளிக்கிளம்பும் கணைகளைப்போல வீறுகொண்டெழுந்து செயல்படும் போர்க்குணமிக்க நம் பேரியக்கத் தோழர்கள் வேங்கையின் வேகத்தை முறியடிக்கும் வகையில் களப்பணிப்ணியாற்றிட மாநில மையம் புரட்சிகரமான போராட்ட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் 72 மணிநேர தொடர் உண்ணாவிரத அறப்போராட்டம் சென்னையில் 08.02. 2021 முதல் 10.02.2021 முடிய சென்னையில் நடைபெற உள்ளது. அந்நாட்களில் அப்போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் ஜாக்டோ ஜியோவின் ஆர்ப்பாட்ட போராட்டங்களில் நம் இயக்கத் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். அப் போராட்டங்களைத் திட்டமிடுவதற்காக 06.02.2021 அன்று நடைபெறும் ஜாக்டோஜியோ மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் நம் இயக்கத் தோழர்கள் தவறாது கலந்துகொண்டு போராட்டக் களத்திற்கு வலிமை சேர்க்க வேண்டும் என மாநில மையம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

குறிப்பு: தொடர் முழக்கப் போராட்டம் தொடர்பான மாதிரி துண்டுப்பிரசுரம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. அதில் போராட்டம் நடைபெறும் இடம் "வள்ளுவர் கோட்டம், சென்னை"என்று குறிப்பிடவும்.

போராட்ட வாழ்த்துக்களுடன்
ச.மயில்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES