Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

04 January 2021

கருணை அடிப்படையில் அரசுப்பணி பெற நடைமுறைகள் என்னென்ன?

கருணை அடிப்படையில் அரசுப்பணி பெற நடைமுறைகள் என்னென்ன? 

அரசுப்பணி: காலிப்பணியிடங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசு எப்போது வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யும்.

 "பணியிலிருக்கும்போதே உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணியைப் பெற என்ன செய்ய வேண்டும்? யாரை அணுக வேண்டும்? எத்தனை மாதங்களில் வாரிசுக்கு வேலை கிடைக்கும்?" என்ற கேள்வியை எழுப்பிருந்தார் விகடன் வாசகர் முருகன். அந்தக் கேள்வியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது.

அரசுப்பணி என்பது பலருக்கும் கனவாக இருக்கும். அரசுப்பணிக்கு வருபவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு எனப் பலகட்ட சோதனைகளுக்கு பிறகே பணியில் சேர முடிகிறது. அப்படி பணியில் சேர்பவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்திலோ, விபத்திலோ உயிரிழந்தால், கருணை அடிப்படையில் இறந்தவரின் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவருக்கு அரசுப்பணியினை வழங்கும் திட்டம் 1972-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பினை பெறுவது எப்படி என்பது குறித்த வழிமுறைகளை விளக்குகிறார் மத்திய அரசு பணியாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன்.

18 வயது நிரம்பியிருக்க வேண்டும்!
விண்ணப்பிப்பவர்களுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். இறந்தவரின் பெற்றோர் அல்லது மனைவி விண்ணப்பம் செய்கிறார்கள் எனில், அவர்கள் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

"இறந்தவர் கால முறை ஊதியம் பெற்றவராக இருந்தால், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்கப்படும். 1.4.2003-க்கு முன் பணியில் சேர்ந்தவர் எனில், கணவன் அல்லது மனைவிக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுவதோடு, விண்ணப்பத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்பும் வழங்கப்படும்.

இறந்தவர் அரசாங்கத்தில் எந்தத் துறையில் பணியாற்றியவராக இருந்தாலும், அவரின் குடும்பத்தினர், கருணை அடிப்படையிலான அரசாங்க பணிக்கு விண்ணப்பிக்கலாம். இறந்தவரின் திருமணம் ஆகாத சகோதரன், சகோதரி அல்லது மகன், மகள், மனைவி, தந்தை, தாய் என யார் வேண்டுமானாலும் வேலை பெற விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பவர்களுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். இறந்தவரின் பெற்றோர் அல்லது மனைவி விண்ணப்பம் செய்கிறார்கள் எனில், அவர்கள் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மகன், மகள், சகோதரன், சகோதரி எனில் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தற்காலிகப் பணி நீக்கத்தில் இருந்து இறந்தவர்களுக்கும் இது பொருந்தும்.


அரசு அலுவலகம்மாதிரி படம்


இறந்தவர் எந்தப் பொறுப்பில் அல்லது பதவியில் இருந்து இறந்திருந்தாலும், அவரின் வாரிசுகளுக்கு கல்வி அடிப்படையில் குரூப் 'சி' அல்லது குரூப் 'டி' பணியிடங்களே வழங்கப்படும். கல்வித்தகுதியே இல்லாதவர்கள் எனில் துப்புரவுப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். இறந்தவர் பணியாற்றிய துறையில் காலிப்பணியிடங்கள் இல்லாத பட்சத்தில், அந்த மாவட்ட ஆட்சியரின் பரிசீலனையின் அடிப்படையில் வேறு துறையில்கூட பணி நியமனம் செய்ய இயலும். அதே போன்று எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படும். இதற்கு விண்ணப்பதாரர் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.


சம்பந்தப்பட்டவர் இறந்து மூன்றாண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்தில் வேறு யாரேனும் அரசாங்கப் பணியிலிருந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ள யாரும் கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்க இயலாது. அதேபோன்று குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அசையும் சொத்துகளும் அசையா சொத்துகளும் இல்லாமல் இருத்தலும் அவசியம்.



இறந்தவரின் குடும்பத்தில் யாரின் பெயரில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பம் செய்கிறார்களோ, அவரைத் தவிர அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள், `அவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை’ என மறுப்பின்மைச் சான்றிதழ் வழங்க வேண்டும். அதேபோன்று குடும்பத்தில் மூத்த வாரிசு இருக்கும்போது இளையவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க விண்ணப்பித்தால் அதற்குரிய காரணத்தையும் எடுத்துரைக்க வேண்டும். திருமணம் செய்து கொண்ட பின்னர் பணி வாய்ப்பு பெறும் தனிநபர், தன் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் வாழ்நாள் முழுவதும் உதவி புரியும் வகையில் ஆவணம் வழங்கப்படும்.


திருமணமாகாத மகள் பணிக்காக விண்ணப்பிக்கிறார், ஆனால், பணி கிடைப்பதற்குள் திருமணம் முடிந்துவிட்டது என்றால், பணி வழங்கப்படும் போதும் மறுப்பின்மைச் சான்றிதழ் மீண்டும் ஒரு முறை அரசால் பெறப்படும். அந்த நேரத்தில் குடும்பத்தில் உள்ளவர்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோரியுள்ள திருமணமாகாத பெண்ணைத் (மகள்/ சகோதரி) திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நபர், 'எதிர்காலத்தில் பெண்ணின் குடும்பத்திற்கு செய்யும் உதவிக்கு மறுப்பு ஏதும் ஏற்படுத்த மாட்டேன்' என்ற உறுதி மொழி அளிக்க வேண்டும்.


வேலை வாய்ப்பைப் பெற இணைக்க வேண்டியவை:

இறந்த அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் சான்றொப்பமிட்ட நகல்.

அந்தப் பகுதி வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வாரிசுரிமைச் சான்று.
பணியில் இருந்தவரின் இறப்புச் சான்று.

மறுப்பின்மைச் சான்று.

குடும்பத்தின் வருமானச் சான்று.

வயதுச் சான்று.

அரசுப் பணி தேர்வு

மேற்கண்டவற்றை இணைத்து இறந்தவர் பணியாற்றிய துறையில் இருக்கும் மாவட்ட தலைமை அலுவலரிடம் கொடுக்க வேண்டும். விண்ணப்பித்து இத்தனை ஆண்டுகளுக்குள் பணி நியமனம் வழங்கப்படும் என்று சொல்ல இயலாது. காலிப்பணியிடங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசு எப்போது வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யும். பொறுத்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலரைத் தவிர்த்து இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES