Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

14 January 2021

பொங்கல் வைக்க உகந்த நேரம் மற்றும் பொங்கல் வழிபாட்டு முறை


பொங்கல் வைக்க உகந்த நேரம்!

பண்டிகைகள் அனைத்துமே குதுகலத்துக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் கொண்டாட்டத்துக்காகவும் ஏற்பட்டவையே. மேலும் நன்றி சொல்லும் விதமாகவும் பண்டிகைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கைக்கும் கடவுளுக்கும் நன்றி சொல்லும் விதமாகவும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் உழவுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் உள்ளதுதான் பொங்கல் திருநாள்.


தை மாதத்தின் பிறப்புதான் சங்கராந்தி பண்டிகை என்றும் தைத்திருநாள் என்றும் பொங்கல் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது.

குடும்பமும் உறவுமாகச் சேர்ந்து கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை. இதனை சூரியப் பொங்கல் என்றும் சொல்லுவார்கள். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகை.

புதுப்பானையில் பொங்கலிடுவார்கள். புதிதாக மண்பானை வாங்குவதும் அதில் பொங்கல் வைப்பதும் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகிறது.வீட்டில் சமையலறையில், கியாஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைப்பது வழக்கமாகிவிட்டது என்றாலும் பெரும்பாலான வீடுகளில், வாசலில் அடுப்பிட்டு பொங்கல் வைக்கிற வழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

அரிசியும் வெல்லமும் இட்டு பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு அதைப் படைத்துவிட்டு, பொங்கும் தருணத்தில் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கோஷங்கள் எழுப்பி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவார்கள் மக்கள்.

இயற்கையான சூரியனை வணங்கும் பொங்கல் பண்டிகை, மறுநாள் கால்நடைகளைக் கொண்டாடி வணங்கிப் போற்றும்விதமாக மாட்டுப் பொங்கல் என்றெல்லாம் கொண்டாடப்படுகிறது.

இதன் பின்னர், சொந்தபந்தங்களுடனும் உறவுகளுடனும் இணைந்து வம்சம் செழிக்கவும் தலைமுறை செழித்தோங்கவும் காணும் பொங்கல் எனும் வைபவமும் நடைபெறும்.

இப்படி, உணர்வுடன் கலந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள்.

14ம் தேதி வியாழக்கிழமை பொங்கல் திருநாள். அன்றைய நாளில், பொங்கல் வைக்கும் நேரமாக, உகந்த நேரமாக, சிறப்புக்கு உரிய நேரமாக... நல்லநேரத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் நாளே மகர சங்கராந்தி. அதுவே தை மாதப் பிறப்பாக அமைகிறது. 2021 ம் ஆண்டு மகர சங்கராந்தி என்பது வாக்கியப் பஞ்சாங்கப்படி காலை 11.50 மணிக்கு நிகழ்கிறது. எனவே பொங்கல் வைப்பது என்பது அந்த நேரத்தில் வைத்துக்கொள்ளலாம்.11.50 லிருந்து 12.30க்குள் பொங்கல் வைத்து வழிபடலாம். அதிகபட்சமாக மதியம் 1.30க்குள் வைத்துவிடவேண்டும். காரணம் வியாழக்கிழமை 1.30- 3 ராகுகாலமாக அமையும் என்பதால் அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு திருவோண நட்சத்திர தினத்தன்று மாதம் பிறக்கிறது. இந்த நாள் வஜ்ர யோகம், பாலவ கரணம், மீன லக்னத்தில் அமைகிறது. இதெல்லாமே மிகச்சிறந்த முகூர்த்தமாக அமைகிறது. குறிப்பாக குருவாரமான வியாழக்கிழமை மீன லக்னத்தில் ( தனுசுவும் மீனமும் குருவுக்குண்டான லக்னங்கள்) அமைவது சிறப்புடையது. அதனால் இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு குருவினுடைய கடாட்சத்தைப் பெற்றுத்தரும். குருவின் அருள் இருந்தால் எந்தவிதமான துன்பமும் பறந்துவிடும். எனவே நாளைய தினம், பொங்கல் வைத்துவழிபட மிகவும் சிறப்புடைய தினமாக அமைந்துள்ளது.

இந்த நன்னாளில் ஆலயம் தொழுவது மிகவும் சிறப்பானது. உத்திராயனப் புண்யகாலத்தின் தொடக்க நாள் என்பதால் மந்திர உபதேசம் பெற மிகவும் சிறந்தநாள். இந்த நாளில் முன்னோர் வழிபாடு செய்வதும் அவசியம். புண்ணியகால தர்ப்பணம் செய்பவர்கள் இந்த நாளில் கட்டாயம் அதைச் செய்து வழிபட வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் தொடக்கமுமே தானங்கள் செய்ய ஏற்ற தினமாகும். அதிலும் மகர சங்கராந்தி தினம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் கட்டாயம் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இதன்மூலம் புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.


பொங்கல் வைக்க உகந்த நேரம் :

அதாவது காலை 11 மணி முதல் 12 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். வழிபடலாம். அதற்கு முன்னதாகவே பொங்கல் வைத்து பூஜிக்க நினைப்பவர்கள், காலை 8.09 மணி முதல் 9 மணிக்குள் பொங்கல் வைத்து வழிபடலாம் என்று தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இயற்கையை வழிபடுவோம். சூரிய நமஸ்காரம் செய்வோம். சூரியப் படையலிடுவோம். பொங்கல் படையலிட்டு, ஒற்றுமையுடன் கொண்டாடுவோம். உலக நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வோம்!

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES