Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 November 2020

நீதியரசர் முருகேசன் குழுவும்,24 அரசாணைகளும் ,ஊதியக் குறைதீர் குழுக்களும், இடைநிலை ஆசிரியர்களை வஞ்சித்த வரலாறும்

நீதியரசர் முருகேசன் குழுவும்,24 அரசாணைகளும் : ஊதியக் குறைதீர் குழுக்களும், இடைநிலை ஆசிரியர்களை வஞ்சித்த வரலாறும்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் 


மாநில பொதுச் செயலாளரின் கடிதம், நாள்:21.11.2020.



File photo


பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!வணக்கம்.


கடந்த 12.11.2020 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண்கள்: 399 முதல் 422 முடிய உள்ள 24 அரசாணைகள் பற்றி பரவலாக ஆசிரியர்கள் மத்தியில் விவாதமும், விரக்தியும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.


24 அரசாணைகளில் ஒன்று கூட ஆசிரியர்களுக்கானது இல்லை என்ற ஏமாற்றம் ஆசிரிய நண்பர்கள் பலரது பதிவுகளில் வெளிப்பட்டுள்ளது.


ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் அவர்கள் தலைமையிலான ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கான குழு எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டது?அதன் அதிகார வரம்புகள் என்ன? என்பதை நம் பேரியக்கத் தோழர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.


தமிழ்நாடு அரசு ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அரசாணை எண்:234 நிதி (ஊதியப் பிரிவு) துறை நாள்:1.6.2009 மூலம் நடைமுறைப்படுத்தியது. அந்த ஊதியக்குழுவில் பல துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சங்கங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்புக்கள்,ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தன.அதில் முக்கியமானது தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மறுக்கப்பட்டது தொடர்பாக நம் இயக்கம் உட்பட பல்வேறு இயக்கங்கள் வைத்த கோரிக்கை.


மேற்கண்ட கோரிக்கைகளை ஆய்வு செய்து தீர்வு காண்பதற்காக அன்றைய தொழில்துறை முதன்மைச் செயலாளர் திரு.ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் தலைமையிலான ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது பரிந்துரைகளை மார்ச் 2010இல் 379 பக்கங்களில் அரசுக்கு சமர்ப்பித்தது.அக் குழுவின் பரிந்துரைகளின்படி பல்வேறு துறை ஊழியர்களின் ஊதியம் சார்ந்த 87 அரசாணைகள் வெளியிடப்பட்டன. அதில் ஒரு அரசாணை கூட ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அக்குழு தனது பரிந்துரையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கினால் ஆண்டுக்கு 688 கோடி ரூபாய் செலவாகும் என்றும்,அதனால் அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்படும் என்றும்,மத்திய அரசாங்கத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும், தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 129 என்றும்,இவ்வளவு எண்ணிக்கையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கொடுக்க இயலாது எனவும் தெரிவித்தது.


மேலும்,தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் பணியாற்றுபவர்கள் என்றும்,அங்கு விலைவாசி மிகவும் குறைவு என்றும், வாழ்க்கைச் செலவு குறைவு என்றும் வேடிக்கையான, வினோதமான,நீதிக்குப் புறம்பான காரணங்களைக் கூறி இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்து.


இக்குழுவின் பரிந்துரைகளின்படி வெளியிடப்பட்ட அரசாணை களின் படி ஒரு சில துறைகளின் சிலவகைப் பணிநிலை ஊழியர்கள் பயன்பெற்றனர்.அதே நிலை கொண்ட வேறு சில துறை ஊழியர்களுக்கு பயன் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் ஒத்த ஊதிய விகிதம் பெற்று வந்த பல்வேறு துறைகளின் ஒரே பணி நிலைகொண்ட ஊழியர்களுக்குள் ஊதிய முரண்பாடு ஏற்பட்டது.இவ்வாறான முரண்பாடுகளுக்கு தீர்வு காண அமைக்கப்பட்டதுதான் முதன்மைச் செயலாளர் திரு.கிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையிலான மூவர் குழுவான ஊதியக் குறை தீர் குழு


அக்குழு தனது அறிக்கையை 2012 அக்டோபரில் 336 பக்கங்களில் சமர்ப்பித்தது.அதன்படி தமிழக அரசு ஒரு நபர் ஊதியக்குழுவில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட 21 துறைகளைச் சார்ந்த 57 வகையான அலுவலர்களின் ஊதியத்தைக் குறைத்து அல்லது மாற்றியமைத்து அரசாணை வெளியிட்டது.மூவர் குழுவிலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி நமது இயக்கம் உட்பட பல்வேறு ஆசிரியர் இயக்கங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தன.ஆனால், மூவர் குழு அதைப் பொருட்படுத்தவில்லை.


ஆனால்,இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கை குறித்து தனது அறிக்கையில் மூவர் குழு குறிப்பிட்டுள்ள காரணம்தான் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமைந்தது. அது தனது அறிக்கையில் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் பத்தாம் வகுப்புக் கல்வித் தகுதியுடன் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் என்றும்,மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்கள் என்றும், எனவே மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கத் தேவையில்லை என்றும் கூறியது.இவ்வாறு அடுத்தடுத்த இரண்டு ஊதியக்குழுக்களும் பொய்யான,நீதிக்குப் புறம்பான காரணங்களைக் கூறி இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதாரப் பாதிப்பை நிகழ்த்தின.


மூவர் குழுவால் பாதிக்கப்பட்ட 20 துறைகளின் ஊழியர் சங்கங்களும், பாதிக்கப்பட்ட சில தனி நபர்களும் இப்பிரச்சனையை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். உயர் நீதிமன்றத் தீர்ப்பும் தங்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்காத நிலையில் உச்சநீதிமன்றத்தை நாடினர். மேல்முறையீட்டு வழக்கு எண்.10029/2017 உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 28.11. 2019 அன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 20 துறைகளின் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக ஒரு நபர் குழு மற்றும் மூவர் குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக ஆய்வு செய்து தீர்வு கண்டிட ஊதிய குறை தீர்க்கும் குழு அமைத்திட ஆணையிட்டது. அதன்படி அமைக்கப்பட்டதுதான் நீதியரசர் முருகேசன் அவர்கள் தலைமையிலான இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான திரு.பணீந்திர ரெட்டி மற்றும் டாக்டர்.J. இராதாகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட மூவர் குழு


அக்குழுவின் பரிந்துரைகள் 7.9.2020 அன்று தமிழக அரசிடம் வழங்கப்பட்டது.அதன் பேரில் வெளியிடப்பட்ட அரசாணைகள்தான் 20 துறைகள் சார்ந்த 52 வகை ஊழியர்களின் ஊதியம் சார்ந்த 24 அரசாணைகள்.உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட மூவர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கண்ட ஊதிய மாற்றம் என்பது நடந்துள்ளது.தமிழக அரசு தானாகவே முன்வந்து இந்த ஊதிய மாற்றத்தை வழங்கவில்லை.மேலும், 2010 இல் தொடங்கிய இப்பிரச்சனை 10 ஆண்டுகால சட்டப் போராட்டத்தின் வழியே தீர்வு காணப்பட்டிருக்கிறது. அதில் இன்னும் கூட சில பிரிவு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் தொடர்வதாகவும் சம்பந்தப்பட்ட ஊழியர்களால் கூறப்படுகிறது.


இந்நிலையில் ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக பரிந்துரை செய்வதற்கு அதிகாரம் பெறாத நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழுவிடம் பல ஆசிரியர் அமைப்புகள் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக பல கோரிக்கை மனுக்களை அளித்தன. அவ்வாறு கோரிக்கை மனுக்களை அளித்த ஆசிரியர் இயக்கங்களை எதற்காக நீதியரசர் தலைமையிலான குழு அழைத்து மணிக்கணக்கில் கருத்துக்களை கேட்டது என்பது தான் புரியாத புதிராக உள்ளது. அவ்வாறு கேட்டறிந்த குழு தனது அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் பற்றி எதுவும் குறிப்பிடாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.இதன் மூலம் மூவர் குழுவான மூன்றாவது குழுவும் இடைநிலை ஆசிரியர்களுக்குப் பட்டை நாமத்தை அளித்துள்ளது என்பதுதான் உண்மை. இதுவே பல ஆசிரிய நண்பர்களின் வருத்தத்திற்கும், வலைதளப் பதிவுகளுக்கும் காரணமாகி விட்டது.


மேலே குறிப்பிட்ட மூன்று குழுக்களும் தமிழக அரசின் ஆறாவது ஊதியக் குழு சார்ந்து அமைக்கப்பட்டவையாகும். ஆனால்,தமிழக அரசு பிப்ரவரி 2018ல் அமைத்த திரு.சித்திக்,IAS தலைமையிலான குழுதான் தமிழக அரசின் ஏழாவது ஊதியக்குழு தொடர்பான குழுவாகும்.அக்குழு 2019 ஜனவரியில் தனது அறிக்கையை தமிழக அரசுக்கு அளித்தும்,இதுவரை அந்த அறிக்கையைப் பற்றி தமிழக அரசு மூச்சுக் கூட விடவில்லை.


தமிழக அரசு எதற்காக திரு. சித்திக் அவர்கள் தலைமையிலான குழுவை அமைத்தது? ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் திட்டமிட்டு ஏமாற்றுவதற்காகவா? என்ற கேள்வி நம்முள் எழுகிறது. திரு.சித்திக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினை தொடர்பாக நம் இயக்கம் உட்பட பல்வேறு இயக்கங்கள் ஆதாரப்பூர்வமாகக் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளன. அக்குழு அவற்றை ஏற்றுக்கொண்டு பரிந்துரைகளை அளித்துள்ளதா? அல்லது கடந்த ஆறாவது ஊதியக்குழுவின் 3 குறைதீர் குழுக்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளதா? என்பதைக் கூட நம்மால் அறிய இயலவில்லை.



இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியக் கோரிக்கைக்காக தமிழ்நாட்டில் தொடக்கக்க் கல்வித்துறையில் உள்ள பல்வேறு சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன. சில சங்கங்கள் வெற்றுக்குரலையும், வேதனை கலந்த வார்த்தைகளையும் மட்டும் வெளிப்படுத்துகின்றன. இன்னும் சில சங்கங்கள் வெற்று அறிக்கைகளிலேயே வெற்றி பெற்றுவிட முடியும் என நம்புகின்றன.இன்னும் சில சங்கங்கள் கூட்டுப் போராட்டங்களில் இணைந்து செயல்பட்டுள்ளன. இன்னும் சில சங்கங்கள் தனிச்சங்கமாகக் கூட களத்தில் இறங்கிப் போராடியுள்ளன.




ஆனால்,இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்திற்காக, உச்சகட்டமாக தமிழ்நாட்டின் ஆசிரியர் இயக்க வரலாற்றில் தனிச்சங்க நடவடிக்கையாக அரசாணை எரிப்புப் போராட்டத்தை நடத்திய ஒரே இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மட்டுமே.அப்போராட்டம் 29 மாவட்டங்களில் நடைபெற்றது.அதில் 12,000 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


அதில் 21 மாவட்டங்களில் 1539 ஆசிரியர்கள் மீது காவல்துறை குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.அந்த 1539 ஆசிரியர்கள் மீதும் தொடக்கக் கல்வித்துறை 17(ஆ) நடவடிக்கை மேற்கொண்டது. இன்றுவரை அந்த 1539 தியாகிகளும் பணி ஓய்வு,பதவி உயர்வு, தேர்வு நிலை,சிறப்பு நிலை உள்ளிட்ட வாழ்வாதாரப் பலன்களைப் பெற முடியாமல் உள்ளனர். இது ஒரு வரலாற்றுப் பதிவு என்பதை யாராலும் மறுக்க முடியாது.


அதே போன்று 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் 17(ஆ)நடவடிக்கைக்கு உள்ளான மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் 1500க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள் என்பது யாராலும் மறுக்கமுடியாத ஆதாரபூர்வமான நிகழ்வாகும்.அவ்வாறு 17(ஆ)நடவடிக்கைக்கு உள்ளான நம் இயக்க உறுப்பினர்களின் மாவட்ட வாரியான பட்டியல் நம்மிடம் உள்ளது.



இதுவரை தமிழக அரசின் ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழு சார்ந்து அமைக்கப்பட்ட அனைத்து ஊதியக் குறைதீர் குழுக்களும் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களை வஞ்சம் தீர்த்து விட்டன.இன்று சில ஆசிரியர் இயக்கத் தலைவர்கள் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைகளில் தங்கள் வேதனையை தெரிவித்துள்ளனர். "அறிக்கைகள் மட்டுமே அடுத்தகட்ட இலக்கைத் தீர்மானிக்க முடியாது. மலர் மாலைகளால் மட்டுமே மகுடம் சூடி விடமுடியாது. சால்வைகளால் மட்டுமே சரித்திரம் படைத்து விட முடியாது. பூங்கொத்துக்கள் மட்டுமே புரட்சி செய்துவிட முடியாது." என்பதை ஆசிரியர் சங்கத் தலைவர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.


மரத்தில் ஏறுபவனை எட்டும் வரை தான் தாங்க முடியும்.இந்த அரசாங்கத்திடம் பேசிப்பேசியே,மனுக் கொடுத்து மனுக் கொடுத்தே உரிமைகளைப் பெற முடியும் என்பது எவ்விதத்திலும் நடக்காத செயல். சட்டமன்றத் தேர்தல் களம் நெருங்கிவரும் வேளையில் நம் போராட்டக் களத்தை தீர்மானிக்க வேண்டிய காலமிது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்புக்காக எத்தகைய கள நிகழ்வுகளுக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தயார் நிலையில் உள்ளது.வேற்றுமை மறந்து,குறிக்கோள் உணர்ந்து சக இயக்கங்களும் இணைந்து வந்தால் போராட்டக்களத்தை நமதாக்குவது ஒன்றும் கடினமான செயல் அல்ல.போராட்டக்களத்தை வடிவமைப்போம்! இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்டெடுப்போம்! தொடர்ந்து சமரசமின்றி போராடுவோம்!

தோழமையுடன்
ச.மயில்
பொதுச் செயலாளர்



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES